Wednesday, February 14, 2007

Happy Valentine's Day

ஃபோர்த் பி - பப்புவும் விக்கியும்.

"டேய் பப்பு ! இன்னிக்கு வேலன்டைன்ஸ் டே ! தெரியுமா ?"

பப்பு, தலையை சொறிந்துகொண்டே, "அப்டின்னா என்னடா, விக்கி ?"..

"ஹே ! ஹே ! இது தெரியாதா... ? லூசு ! லூசு !"..

பப்புவுக்கு கோபம். "போடா ! நீதான் லூசு !"

விக்கிக்கு தான் சொல்லவந்ததை சொல்லியாக வேண்டும். அதனால் சண்டையை வளர்க்காமல் தொடர்கிறான்.

"வேலன்டைன்ஸ் டேன்னா என்னன்னு தெரியுமா ?" என்று மறுபடியும் ஆரம்பித்தான்.

பப்பு, மறுபடியும் தலை சொறிந்து, "தெரியாதுடா விக்கி ! ப்ளீஸ் ! சொல்லுடா..." என்றான்.

எதிர்பார்த்த பணிவு கிடைத்தவுடன் விக்கி கெத்து காட்ட ஆரம்பித்தான்.

"வேலன்டைன்ஸ் டேன்னா மம்மியும் டாடியும் சண்டை போடாம இருக்கற நாள். மம்மி டாடிக்கு கிஃப்ட் வாங்கி கொடுப்பாங்க ! டாடி மம்மிக்கு கிஃப்ட் வாங்கி கொடுப்பாங்க !"

பப்புவுக்கு புரியவில்லை.

"மம்மி இன்னிக்கு டாடிக்கு கழுத்துல மாட்டற டை வாங்கிக் கொடுத்தாங்க ! டாடி மம்மிக்கு ஜோதிகா மாதிரி ரிவர்சபிள் சாரி வாங்கிக் கொடுத்தாங்க... உங்க மம்மி டாடி என்ன வாங்கிகொடுத்தாங்க.... ?"

பப்புவிற்கு இது அவமானம் தரும் தருணம். விக்கி எப்பொழுதும் இப்படித்தான். அவன் வீட்டைப்பற்றி சொல்லிவிட்டு பப்புவின் வீடு பற்றி கேட்பான். பப்பு பதில் சொல்ல முடியாமல் முழிப்பான்.

குழப்ப நிலையில் இருந்த பப்பு "இல்லடா விக்கி ! எங்க அம்மா அப்பா, எந்த கிஃப்டும் வாங்கலை. ஆனா அவங்க என்னிக்குமே சண்டை போட மாட்டாங்களேடா !! அப்படி இருந்தாலும் கிஃப்ட் கொடுக்கனுமா ?" என்றான்.

விக்கி லேசாக முழித்தான். "ஹோம்வர்க் முடிச்சுட்டியா ?" என்றான்.

1 comment:

Bhuvanesh said...

a good one ... really good ... have u ever read the supposed mini stories that appear in magazines like Kumudham and Vikatan?

Blog Archive

Stats

cool hit counter