Tuesday, July 03, 2007

........

ஈமெயில் குவியல்களுக்குள் புகுந்து அதகளம் செய்து கொண்டிருந்தான் திவாகர். பைசா ப்ரயோஜனம் இல்லாத ஆடிட், அதற்குத்தான் இத்தனை அமளி துமளி. மூன்று நாட்களாக பகீரதத்தவம் இருந்து வேலை வாங்கி, வேலை செய்து கொண்டிருந்தான். உட்கார்ந்த இடத்திலிருந்துதான் வேலை என்றாலும் இருபது பேரை கட்டி மேய்த்து, அவர்களையும் பிழிந்து சாறெடுத்து, தானும் மெனக் கெட்டு 200% ப்ரொடக்டிவிடி வரவழைத்துக் கொண்டிருந்தான்.

நடு நிசியில் தான் வீட்டு ஞாபகம் வரும். மனைவியை அந்த வேளையில் இம்சிக்காமல், வழியிலேயே ஒரு கையேந்திபவனில் காளிஃப்ளவர் மசால் தோசை இரண்டை கபளீகரம் செய்து கொள்வான். பூட்டைத் திறந்து வீட்டுக்குள் செல்லும் போது, "அச்சயா நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டுத் தூங்க வேண்டும்" என்று நினைத்துக் கொள்வான். அந்த நினைவெல்லாம் பேண்ட் கழற்றி லுங்கிக்குள் நுழைவதற்குள் கரைந்துவிடும். மூன்று மணி நேர உறக்கத்திற்காக ஏன் வீட்டுக்கு வர வேண்டும் என்ற யோசனையுடன் தூங்க ஆரம்பிப்பான்.

செல்ஃபோனின் அரக்கத்தனமான அலாரத்தில் பதறியடித்து எழுந்திருத்து, இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியையும் அச்சயாவையும் இரண்டு நிமிடங்கள் வெறித்துப் பார்ப்பான். பின் குளித்து முடித்து வேலைக்குக்கிளம்பிவிடுவான். சாக்ஸ் போடும்போது மட்டும் "அச்சயாவின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, தலைமுடியை வருடிவிட்டு, பின் தான் வேலைக்குச் செல்ல வேண்டும்" என்று நினைத்துக் கொள்வான். ஷூ லேஸ் கட்டி முடிப்பதற்குள் அந்த நினைப்பை மறந்திருப்பான்.

அன்று ஆடிட்.

நடக்கவில்லை. அத்தனை நாள் அவசரம் அவசரமாய் வேலை பார்த்ததின் அர்த்தம், மதிப்பற்று போய்விட்டது. சக ஊழியர்களிடம் வழக்கம் போல கடுப்படித்துவிட்டு, தன் ரூமில் சென்றமர்ந்தான். சபேசன் உள்ளே வந்தான் - சக மேனேஜர்.

"என்னடா ! ஏண்டா இப்படியெல்லாம் உழைக்கிறே ? லுக் அட் யுவர்செல்ஃப் ! யூ லுக் ஹாரிபிள்"... பதில் பேசாமல் மானிட்டரை வெறித்துப்பார்த்து உட்கார்ந்திருந்தான்.

"கோ ஹோம்! வீட்டுக்குப்போய்..."

"ம்ம்ம்ம்ம்.. "

வீட்டுக்குப் போகலாம் என்று முடிவு செய்தான். மனைவியும் அச்சயாவும் வீட்டில் தான் இருப்பார்கள். அச்சயாவிற்கு பார்பி டால் வாங்கிச்ச்செல்லவேண்டும் என்று முடிவு செய்தான். குழந்தையுடன் இன்று விளையாட வேண்டும் என்று முடிவு செய்தான். ஓடிப்பிடித்து விளையாட வேண்டும். மாடி ரேஸ் விளையாடலாம். பார்பி டால் வைத்து மெத்தையில் கதை சொல்ல வேண்டும். அவள் தூங்கியவுடன் போர்த்திவிட்டு நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, தலை முடி வருடி விட்டு அவள் பக்கத்திலேயே தூங்கவேண்டும், இன்று.

காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றான். வீட்டை வெளிச்சத்தில் பார்த்து பல நாட்களாகி விட்டதைப்போல இருந்தது. ஏனோ, தன் வீட்டிலேயே விருந்தாளியைப்போலே உணர்ந்தான்.

"அச்சயா !!! " என்று கூப்பிட்டான். தப தப என்று மாடியில் இருந்து அவனது குட்டி தேவதை, மழலைப்பாதங்களில் கொலுசு சப்தத்துடன் ஓடிவந்தாள். "அச்சயா இல்லப்பா ! அக்ஷயா" என்று என்றும் போல திருத்தினாள். அவளை அள்ளி வாரி அணைத்து உச்சி முகர்ந்தான்.

"ஹைய்ய்ய்ய்ய் !!" அச்சயாவின் அகலமான கண்கள், பார்பி டால் பாக்ஸைப்பார்த்தவுடன் இன்னும் அகலமாய் விரிந்தது. நான்கு நாள் உழைப்பின் அழுத்தம், தன் மகளின் இன்பத்தில் பறந்தோடிப்போனது. "குட்டிச்செல்லம் ஹாப்பி ?" என்று கேட்டான். அச்சயா பாக்ஸை ஆட்டி ஆட்டி சந்தோஷமாய் சிரித்தாள். திடீரென யோசனை ரேகைகள், அவள் முகத்தில்.

அச்சயா பாக்ஸ் பிரிக்காமல், "பி. ஏ. ஆர்.. பி.. அப்பா... இருப்பா வர்ஷாகிட்டே காமிக்க போறேன். அவ கிட்டே ஜி.ஐ.ஜோ இருக்கு.. நான் காமிச்சுட்டு வெரேன்,..." என்று தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு விடு விடுவென வெளியே ஓடினாள். பக்கத்து வீட்டுக்கு. அவள் திரும்பி வர ரொம்ப நேரம் ஆகும் என்றாள் மனைவி.

அதே இடத்தில் வெகு நேரம் நின்று கொண்டிருந்தான், திவாகர். எவ்வளவு நேரம் நின்றிருப்பான் தெரியவில்லை.

-
மறுனாள் காலை. செல்ஃபோன் அலாரம் அடித்தது. எழுந்து பார்த்தான். மனைவியுன் அச்சயாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஓரமாய் பார்பி டால் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.

"குளித்து முடித்துவிட்டு அச்சயாவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ஆஃபீஸ் செல்லவேண்டும்".

No comments:

Blog Archive

Stats

cool hit counter