Wednesday, May 16, 2007

ம்ம்ம்ம்ம்!

"ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுப் பாரேன்" என்று நோட் புக்கை நீட்டினான் கிருஷ்ணமூர்த்தி என்கிற கிச்சாமி. சடாரென திரும்பிப் பார்த்தாள் கோசலை. "என்னது ? புதுசா.. கதையெல்லாம் ?,..." என்று ஒரு அதிர்ச்சியை காற்றில் விட்டுவிட்டு, மீண்டும் பொறிவிளங்கா உருண்டையில் ஐக்கியம் ஆனால். நீட்டிய நோட்புக்கை நீட்டியபடியே "நாழி ஒழியும்போது படிச்சுப்பாரு கோசலை !" என்றான்.

"ம்ம்ம்ம்" என்று சொன்னாள். அவள் அப்படிச் சொன்னால், அவள் கவனம் அவன் சொன்னதில் இல்லை என்பது பொருள். பொறிவிளங்கா உருண்டையை அமுக்கிப் பார்த்து "ம்ம்ம்.. ஆயிடுத்து. என்னன்னா சொன்னேள் ?" என்று திரும்பிப் பார்த்தாள். கிச்சாமி நோட்புக்கை நீட்டியபடியே நின்றிருந்தான். "கதையா ?".. என்று புன்னகைத்தாள்.

"உங்களுக்கு கதையெல்லாம் எழுத வருமா என்ன ?" என்று கை அலம்பிவிட்டு நோட்புக்கை வாங்கிக் கொண்டாள். முதல் பக்கத்தைப் பிரித்தாள். "தலைப்பே போடலியே ?" என்று கூறிவிட்டு பதில் எதிர் பார்க்காமல் தொடர்ந்த்து படிக்கலானாள். குக்கர் சப்தம் கேட்டவுடன் கோசலை வேகமாக பக்கங்களை புரட்டி எத்தனை பக்கங்கள் என்று எடைபார்த்தாள். "ஏயப்பா ! பெருசா இருக்கே ! மெதுவா படிக்கறேன்."

--
கிச்சாமி அந்தி சாய்ந்து வந்தான். ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்த கோசலை, கடமை தவறாமல் காபி கலந்து கொடுத்துவிட்டு மீண்டும் டி.வி யில் ஐக்கியமானாள். கிச்சாமி, "என்ன படம்டீ இந்தப்பாட்டு.. ரொம்ப வித்தியாசமா இருக்கே!" என்றான். "ரோஜா ! புது படம்னா ! எல்லா பாட்டும் ப்ரமாதமா இருக்கு. சிலோன் ரேடியோல அடிக்கடி போடரான்".

ஊஞ்சலில் அவன் நோட்புக் மல்லாக்காக கிடத்திவைக்கப்பட்டிருந்தது. "படிச்சியா ?" என்றான். "கோசலை !". "ம்ம்ம்ம்... ?" "கதை படிச்சியா ?". "ம்ம்ம்ம்....". கண்கள் டி.வி. விட்டு அகலாமல் பதில்வந்தது.

ஒலியும் ஒளியும் முடிந்தது. "சாப்ட்டேளா ?". "ஆச்சு... கதை படிச்சியா ?"

ஊஞ்சலில் மடித்துவைத்திருந்த நோட்புக்கை எடுத்துப் பிரித்து, கடைசியாகத் தான் படித்த பக்கத்தை திருப்பி கிச்சாமியிடம் காட்டி, "இதுவரைக்கும் ஆச்சு.. இன்னும் இவ்வளவு இருக்கே" என்றாள். கிச்சாமி இன்னும் நிறைய எதிர்பார்த்தான்.

"இதுவரைக்கும் நன்னா இருக்கா ?"

"சினிமா கதையாட்டம் இருக்கு.. நன்னா எழுதியிருக்கேள். முழுசும் முடிச்சுட்டு சொல்றேன்" என்று நோட்புக்கை மீண்டும் யதாஸ்தானத்தில் வைத்துவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கினாள்.

---
ஞாயிறு. மதியம். தூங்கி எழுந்தான், கிச்சாமி. புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் கோசலை. அவனது கதைதான். மூன்று நாட்களாக அவனுக்கு சந்தேகம், அவள் படிக்கிறாளா அல்லது எனக்காக சும்மா பக்கங்களை மட்டும் புரட்டுகிறாளா என்று. இன்று நிவர்த்தியானது. உன்னிப்பாகப் படிக்கிறாளே !

"படிக்கட்டும். முடிவில் தானே அதிர்ச்சியான திருப்பத்தை வைத்திருக்கிறேன்... என்ன சொல்கிறாள் பார்ப்போம்.. இவளுக்குப் பிடித்திருந்தால் கோபிநாத்திடம் சொல்லி ஏதாவது பதிப்பகத்தில் சேர்த்துவிடலாம்..." என்று கிச்சாமி மனதில் ஓடியது.

சில நிமிடங்கள் சோபாவில் அமர்ந்து விட்டத்தை பார்த்தபடியே அமர்ந்து கொண்டிருந்தான். போர் அடித்தது. "ஏண்டி.. சினிமா போலாமா ? சாயங்காலம்.. ரோஜா நன்னாயிருக்காமே " என்றான்.

கவனம் சிதறாமல் "ம்ம்ம்ம்ம்...." என்றாள்.

முதல் முறையாக அந்த பதில் சந்தோஷம் தந்தது. கிச்சாமிக்கு.

1 comment:

Ramya said...

kichami ku badhila kittu/kichandi nu per vechurkalaam..iyer madri irukum..
Apram adhu poruLviLangA urundai, not poriviLanga..
Endha pondaati, ippadi purushan a kandukaama Tv la moozhguvaal.. romba paavam kichaami.. avan avan kaduppaagi podi nu.. net la okkandhu cricinfo aladhu edhavadhu browsing aarambchuduvaan..(oru vela roja vandha time la net popular aagalayo)..appo kooda velila walking poiduvaan.. apadi kichami enna kadhai ezhudinaan.. ?? yen avan pondaati ku pidikanum nu nenaikaraan??

Blog Archive

Stats

cool hit counter